BJP | மதுபான கொள்கை வழக்கில் பிஜேபிக்கு தொடர்பு.!! தேர்தல் பத்திரங்களை மேற்கோள்காட்டி ஆம் ஆத்மி குற்றச்சாட்டு.!!
மதுபான கொள்கை வழக்கில் தொடர்புடைய நிறுவனத்திடமிருந்து பாஜக(BJP) தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி பெற்றிருக்கிறது என ஆம் ஆத்மி(AAP) கட்சி குற்றம் சாட்டி இருக்கிறது.
தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டிருந்த தகவல்களின்படி பாரதிய ஜனதா கட்சி(BJP) டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஒப்புதல் அளித்த நிறுவனத்திடம் இருந்து 52 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களின் மூலம் நிதி பெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது.
மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட சந்திரா ரெட்டியின் நிறுவனமான அரபிந்தோ பார்மா நிறுவனத்திடம் இருந்து பாஜக இந்த தேர்தல் பத்திரங்களை பெற்றிருக்கிறது.
தேர்தல் ஆணையம் 2021 ஏப்ரல் மாதம் முதல் 2023 நவம்பர் மாதம் வரை உள்ள தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தற்போது வெளியிட்டு இருந்தது. இந்த தகவல்களின்படி அரபிந்தோ பார்மா ரூ.52 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி இருக்கிறது. அவற்றில் 66% தேர்தல் பத்திரங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 29 சதவீதம் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கும் எஞ்சிய பகுதி தெலுங்கு தேசம் கட்சிக்கும் நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது.
பிஜேபி பெற்ற 52 கோடி தேர்தல் பத்திரங்களில் 5 கோடி ரூபாய் பத்திரங்கள் சந்திரா ரெட்டி கைது செய்யப்பட்டதிலிருந்து 5 நாட்கள் கழித்து வாங்கப்பட்டிருக்கிறது. சந்திரா ரெட்டி நவம்பர் 10 2022 அன்று கைது செய்யப்படுகிறார். அவரது நிறுவனம் நவம்பர் 15 2022 இல் 5 கோடி ரூபாய் காண தேர்தல் பத்திரங்களை வாங்குகிறது. இந்த பத்திரங்களை பிஜேபி நவம்பர் 21 2022-ல் பணமாக மாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ஜூன் 2023 அரபிந்தோ பார்மா நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குநராக இருக்கும் சரத் ரெட்டியை மதுக் கொள்கை வழக்கில் அனுமதியாளராகச் செயல்பட டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், இந்த வழக்கில் ரெட்டிக்கு நீதிமன்றம் மன்னிப்பு வழங்கியது.
சனிக்கிழமையன்று, ஆம் ஆத்மி(AAP) கட்சியின் தலைவரும், டெல்லி கல்வி அமைச்சருமான அதிஷி, சரத் ரெட்டியின் தேர்தல் பத்திரப்பதிவுகளை குறிப்பிட்டு, அமலாக்க இயக்குனரகம் ஆளும் பிஜேபியின் ஏவல் துறையாக செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் புலனாய்வு அமைப்பு குறிப்பிட்டுள்ள பணம் தேர்தல் பத்திரங்களின் மூலமாக பிஜேபிக்கு சென்று இருக்கிறது எனவும் அதிஷி குற்றம் சுமத்தி இருக்கிறார்.
சரத் ரெட்டி கைது செய்யப்பட்ட போது வர்ணிக்கப்பட்ட மதுபான கொள்கையை பயன்படுத்தி நியாயமற்ற சந்தை நடைமுறையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பிஜேபிக்கு வழங்கப்பட்டுள்ள 52 கோடி தேர்தல் பத்திரங்களில் 57% பத்திரங்கள் நவம்பர் 2022 இலிருந்து நவம்பர் 2023 காலகட்டங்களுக்குள் வாங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் அரபிந்தோ பார்மா நிறுவனத்தின் வருவாய் 2023 ஆம் வருடத்தில் 24 ஆயிரம் கோடியை எட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
அமலாக்கத் துறையினரின் குற்றச்சாட்டின் படி சவுத் குரூப் என்ற நிறுவனத்திடம் இருந்து விஜய் நாயர் என்பவரின் மூலமாக ஆம் ஆத்மி கட்சியினர் 100 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளனர். பாஜகவிற்கு தேர்தல் நன்கொடை வழங்கிய சரத் ரெட்டி சவுத் குரூப் நிறுவனத்தோடு முன்பு தொடர்பில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.