"அண்ணாவிற்கு பாராட்டு; கலைஞருக்கு குட்டு.. 1 கல்லில் 2 மாங்காய் அடித்த அண்ணாமலை.."!! சூசகமான ட்வீட்.!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் தமிழ்நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது நினைவஞ்சலியை செலுத்தி அண்ணாவின் புகழை போற்றினர்.
இந்நிலையில் தீவிரமான திராவிட எதிர்ப்பு கொள்கையை கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேரறிஞர் அண்ணாவை போற்றி புகழ்வதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தனது 'X' வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கும் அண்ணாமலை" தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவர் பேரறிஞர் அண்ணா என புகழாரம் சூட்டி இருக்கிறார்.
மேலும் அறிஞர் அண்ணாவின் மதுவிலக்கு கொள்கை பற்றி பாராட்டு தெரிவித்துள்ள அண்ணாமலை தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என மது மூலம் கிடைக்கும் வருமானத்தை அண்ணா விமர்சனம் செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்த அண்ணா தனக்குப் பிறகு தனது வாரிசுகள் கட்சியில் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அதே பதிவில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் வேரூன்றி இருக்கும் வாரிசு அரசியலை மறைமுகமாக சுட்டிக் காட்டி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் அவருக்கு பிறகு உதயநிதி என வாரிசு அரசியலில் இருப்பதை அண்ணாமலை சுட்டிக்காட்டியதாக பரபரப்பான பேச்சு நிலவி வருகிறது.