'அருணாச்சல் பிரதேசத்தில் தாமரை கொடி' தபால் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை!
அருணாச்சலப் பிரதேசத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் பாஜக அரசு 42 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலச் சட்டசபைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் சிக்கிம் மாநிலத்தில் பிரேம்சிங் தமாங்கின் எஸ்கேஎம் கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், அருணாச்சலில் பாஜக பெரும்பான்மையைப் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேச சட்டசபையில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. இம்மாநிலத்தில் 10 வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். எஞ்சிய 50 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 82.95 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
24 மையங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வருகிற ஜூன் 4-ம் தேதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் ஆளும் பாஜக அரசு முன்னிலை பெற்றுள்ளது. 42 தொகுதிகளில் தற்போது பாஜக வேட்பாளர்கள் தபால் வாக்குகளில் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று மதியம் வரை தபால் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும் எனவும், முடிவுகள் வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைக் காட்டிலும் கூடுதல் இடங்களில் முன்னிலையில் இருப்பதால், அக்கட்சியின் பீமா கந்து மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more ; ‘சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் ஆளுங்கட்சி முன்னிலை..!’ மீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரேம்சிங் தமாங்!