ஹரியானாவில் ஆட்சியை இழக்கும் பாஜக அரசு..! நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஆளுநருக்கு கடிதம்..!
ஹரியானா மாநிலத்தில் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுத்தப்பட்டுள்ளதால் ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் களைகட்டி வரும் நிலையில் ஹரியானா மாநிலத்தை பொறுத்தவரை, மாநில அரசியல் களத்தில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. 90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டமன்றத்தின் பதவிக்காலம் 3 நவம்பர் 2024 அன்று முடிவடைகிறது.[1] முந்தைய சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 2019-ல் நடைபெற்றது. தேர்தலுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சியின் கூட்டணி மாநில அரசாங்கத்தை அமைத்தது. நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு கடந்த மூன்று நாட்களாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பகிர்வு ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிக்க முடியாததால், முன்னாள் கூட்டணி கட்சிகளான ஜேஜேபி மற்றும் பாஜக இடையே பிளவு ஏற்பட்டது. இதன் காரணமாக பாஜகவுக்கு அளித்த ஆதரவை ஜேஜேபி கட்சி திரும்பற்றது. சில தினங்களுக்கு முன் 3 சுயட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு வழங்கி வந்த ஆதரவை திரும்ப பெற்றதால், பாஜக அரசுக்கு 42 இடங்கள் மட்டுமே உள்ளது. இதனால் ஹரியானா மாநில பாஜக அரசு 45 இடங்களை கொண்டிருந்தால் மட்டுமே பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்ற நிலைக்கு வந்துள்ளது.
ஜேஜேபி கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, ஹரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி கடிதம் எழுதியுள்ளார். மூன்று சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து, நயாப் சிங் சைனி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, மாநில சட்டசபையில் பெரும்பான்மை உரிமையை இழந்தது.
மேலும் ஹரியானா மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளது பாஜகவிற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினால், ஜேஜேபி காங்கிரஸை ‘வெளியில் இருந்து’ ஆதரிக்கும் என்று ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஜேஜேபி கூட்டணிக்கு ஹரியானா சட்டமன்றத்தில் தற்போது 45 இடங்கள் உள்ளது.