2047 தான் டார்கெட்...! இன்று பிரதமர் மோடி வெளியிடும் பாஜகவின் தேர்தல் அறிக்கை...!
பாரதிய ஜனதா கட்சி வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை இன்று டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வெளியிடுகிறது. தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை இலக்காகக் கொண்ட பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் நலனை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
மேலும் கலாச்சாரம், வர்த்தகம், தொழில், பாதுகாப்பு, விண்வெளி, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு செய்த சாதனைகளையும் இந்த தேர்தல் அறிக்கை வெளிப்படுத்தும். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றும் இலக்கையும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
பாஜக தலைவர் ஜேபி நட்டா, மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தேர்தல் அறிக்கைக் குழுவை மார்ச் 30 அன்று அமைத்தார். இந்தக் குழு கட்சித் தலைமையகத்தில் இரண்டு முக்கியக் கூட்டங்களை நடத்தியது மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலம் வரும் மக்களிடமிருந்து ஆலோசனைகளைத் தொகுத்து அவற்றை ஆய்வு செய்தது. சாமானிய மக்கள் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தேர்தல் அறிக்கை தீர்வு காண்பதை கட்சி உறுதி செய்துள்ளது.