பரபரப்பு...! பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வழக்கு...! DGP அதிரடி உத்தரவு...!
தமிழகத்தில் சமீபத்தில் லோக்சபா தேர்தலையொட்டி தாம்பரத்தில் 3.99 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அன்று சென்னை-திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு விரைவு ரயிலில் பயணித்த, சென்னை அகரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.சதீஷ், எஸ்.நவீன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த எஸ்.பெருமாள் ஆகிய 3 பயணிகளிடம் இருந்து, பறக்கும் படையினர் மற்றும் போலீசார், ரூ.3.99 கோடியை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றில் பணிபுரிவதாகவும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பணம் கொடுக்கப்பட்டதாக காவல்துறையிடம் சதீஷ் என்பவர் வாக்குமூலம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அடையாள அட்டையை வைத்திருந்ததாகவும், நயினார் நாகேந்திரனின் அடையாளச் சான்றிதழின் நகலும் அவரிடம் இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். ஏப்ரல் 14 ஆம் தேதி, நயினார் நாகேந்திரனை விசாரிக்க தாம்பரம் காவல்துறை சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் இந்த வழக்கு தற்பொழுது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.