"நீ என் மகன்.. நான் உன்னை நேசிக்கிறேன்!" - கத்தியால் குத்திய சிறுவனை மன்னித்த பிஷப்!
ஆஸ்திரேலியாவின் தேவாலயத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த பிஷப் தன்னை தாக்கிய 16 வயது சிறுவனை மன்னித்துவிட்டதாக கூறியுள்ளார்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வேக்லி பகுதியில் உள்ள கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்தில் கடந்த வியாழக்கிழமை பிஷப் மார் மாரி இம்மானுவேல் நேரடி ஒளிபரப்புச் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத 16 வயது சிறுவனால் கத்தியால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். தாக்குதலில் பிஷப் மார் மாரி இமானுவெலுக்குத் தலையிலும் நெஞ்சிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. அதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிஷப் மார் மாரி இம்மானுவேல் ஓர் ஆடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, நான் நன்றாக இருக்கிறேன், மிக விரைவாகக் குணமடைந்து வருகிறேன். கவலைப்படத் தேவையில்லை. என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவரை நான் மன்னிக்கிறேன். மேலும், அவரிடம் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
நீ என் மகன், நான் உன்னை நேசிக்கிறேன், உனக்காக நான் எப்போதும் ஜெபிப்பேன். இதைச் செய்ய உன்னை அனுப்பியவர்களையும் நான் மன்னிக்கிறேன். எனது ஆதரவாளர்கள் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாம் எப்போதும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருக்க வேண்டும். காவல்துறையின் உத்தரவுகளுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. " எனக் குறிப்பிட்டிருக்கிறார்.