சென்னை மக்கள் கவனத்திற்கு...! போகி பண்டிகை... பிளாஸ்டிக், டயர்கள், பழைய துணிகள் எரிப்பதை தவிர்க்க வேண்டும்...!
போகிப் பண்டிகை அன்று பொதுமக்கள் பிளாஸ்டிக், டயர்கள், பழைய துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
போகிப் பண்டிகையையொட்டி பயன்பாட்டில் இல்லாத பழைய துணி, பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் ரப்பர் டியூப் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், மக்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் பிளாஸ்டிக், டயர்கள், பழைய துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில்: போகிப் பண்டிகையையொட்டி பயன்பாட்டில் இல்லாத பழைய துணி, பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் ரப்பர் டியூப் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், மக்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே, மாநகராட்சியின் 15 மண்டலங்களில் இருக்கும் அனைத்து வார்டுகளிலும் பொதுமக்கள் பிளாஸ்டிக், டயர்கள், பழைய துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அவற்றை தனியாக சேகரித்து, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.