ஞாயிற்று கிழமைகளில் சூரிய பகவானை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள்..!
பொதுவாக ஒவ்வொரு கடவுளுக்கும் வழிபாட்டு முறைகளும், பரிகாரங்களும் வேறுபடும். அந்த வகையில் உலகத்திற்கு ஒளியையும், உயிராற்றலையும் தரும் சூரிய பகவானை வழிபட்டு வருவது நமக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று சூரியனை வழிபட்டு விரதம் இருந்து வேண்டி வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். ஞாயிறு விரதம் குறித்து இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
கிரகங்களில் மிகப்பெரியது சூரியன். இந்த உலகிற்கு ஒளியையும், ஆற்றலையும் தருபவர் சூரிய பகவான். சூரிய பகவானை வழிபட்டு வணங்கி வந்தால் ஆற்றலை தந்து எடுத்த காரியங்களில் வெற்றி பெற வைப்பார். மேலும் எதிரிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து எதிரிகளை ஓட செய்வார். சூரிய ஒளி எவ்வாறு நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமோ, அதேபோல சூரிய பகவானின் சக்தி நமக்கு நீண்ட ஆயுளை தரும். குறிப்பாக நோய் நொடிகள் தீரும். பொருளாதார வளர்ச்சி மேம்படும். செய்வினை மாந்திரீகம், துஷ்ட சக்திகள் சூரிய விரதம் இருப்பவர்களை கண்டு ஓடிவிடும்.
சூரிய விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்: முதலில் சூரிய விரதம் இருப்பவர்கள் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எழுந்து குளித்து விட வேண்டும். பூஜை அறையை நன்கு சுத்தம் செய்துவிட்டு பூஜை தட்டிற்கு சந்தனம், குங்குமம் வைத்து அதில் குங்குமம் கலந்த அரிசி, சிவப்பு நிற பூக்கள், ஏதேனும் ஒரு பழவகை போன்றவற்றை தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சொம்பில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்
மேலும் சூரியன் உதிக்கும் திசையை பார்த்து விளக்கு ஏற்றி வைத்து சூரிய பகவானை மனதார வேண்டி சொம்பில் இருக்கும் தண்ணீரை பூஜை தட்டின் மீது தீர்த்தம் போல தெளித்து விட வேண்டும். பூஜை முடிந்த பின்பு முதலாவதாக பழம் அல்லது ஏதாவது இனிப்பு வகையை சாப்பிடலாம். பின்னர் மாலை வரை தண்ணீர், பழச்சாறு, பால் இவற்றை மட்டுமே அருந்த வேண்டும். மாலையில் சூரியன் மறைவதற்கு முன்னதாக பூஜை செய்து விட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். குறிப்பாக ஞாயிறு அன்று சூரிய பகவானுக்கு இந்த விரதம் இருந்து வந்தால் கேட்ட வரம் கண்டிப்பாக கிடைக்கும்.