தினமும் காலையில் கேழ்வரகு கூழ் குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா.!?
நம் முன்னோர்கள் அந்த காலத்தில் உணவே மருந்து என்ற பழமொழியை பின்பற்றி பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து வந்தனர். இதனால் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் பெற்று வாழ்ந்து வந்தனர். அந்த காலத்தில் முக்கிய உணவாக கேழ்வரகில் களி, கூழ் போன்றவற்றையே உண்டு வாழ்ந்து வந்தனர். இது அவர்களுக்கு அந்த நாள் முழுவதும் தேவையான ஆற்றலை அளித்தது.
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஒரு சிலரது வீட்டில் கேழ்வரகு கூழ் உணவாக எடுத்து வந்தாலும், பலரும் இதை சாப்பிட விரும்பவில்லை. ஆனால் தினமும் காலையில் காபி, டீ போன்றவற்றிற்கு பதிலாக கேழ்வரகு கூழ் சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்க்கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. கேழ்வரகு கூழ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை குறித்து பார்க்கலாம்?
வெயில் காலத்தில் ஏற்படும் சூட்டு நோய்களை குணப்படுத்தி உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. உடல் எடையை வேகமாக குறைக்க விரும்புபவர்கள், கேழ்வரகு கூழ் தினமும் காலையில் குடித்து வரலாம். கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி சாப்பாடு அதிகமாக எடுத்துக் கொள்வதற்கு பதில் கேழ்வரகு கூழ் அடிக்கடி சாப்பிடலாம்.
கேழ்வரகில் லிசிடின், அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் போன்ற பல்வேறு வகையான சத்துக்கள் இருப்பதால் இது கல்லீரலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கேழ்வரகு கூழாக தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக கிடைக்கும். இவ்வாறு சத்துகள் நிறைந்த கேழ்வரகு கூழை உண்டு வந்தால் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்று முன்னோர்கள் கருதி வந்தனர்.