பட்டா மாறுதல் + நில அளவை வரைபடம்..!! செம குட் நியூஸ் சொன்ன அமைச்சர்..!! மக்களே இனி அலைய தேவையில்லை..!!
தமிழ்நாட்டில் வீடு, மனை வாங்குவோர் பட்டா பெற விண்ணப்பிக்கிறார்கள். இதை எளிமைப்படுத்தவும், பொதுமக்களுக்கு அலைக்கழிப்பை குறைக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல் தொடர்பான நில அளவை சேவையில், தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் விண்ணப்பித்தவுடன் நில அளவை செய்து கொடுக்கும் அளவுக்கு, சர்வேயர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நில அளவை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை அவர் திறந்து வைத்தார்.
பின்னர், பேசிய அவர், ”மத்திய அரசின் தேசிய நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், 2023இல் அண்ணா பல்கலையின் நில அளவை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு ரூ.1.47 கோடி ஒதுக்கப்பட்டது. இதை பயன்படுத்தி கூடுதலாக 50 பேர் பயிற்சி பெறுவதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
டிஎன்பிஎஸ்சி மூலம் கடந்த ஆண்டு 1,000 பேர் சர்வேயர்களாக நியமிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து மேலும் 300 பேரை தேர்வு செய்யக்கோரி டிஎன்பிஎஸ்சிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் முடிந்தவுடன், பொதுமக்கள் விண்ணப்பித்தவுடன் நில அளவை பணிகள் உடனே செய்து தரப்படும். இனிமேல் சர்வேயர் வருகைக்காக நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லை.
நில அளவை பணி விரைவாக முடிந்தால், பட்டா மாறுதல் பணிகளும் உடனுக்குடன் முடிந்து விடும். பட்டா மாறுதல் மேற்கொள்ளப்படும்போதே, நில அளவை வரைபடத்தையும் மக்கள் உடனடியாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த புதிய வசதிகள் விரைவில் நடைமுறைக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா..? 4 நாட்கள் சிறப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!