வந்தே பாரத் ரயில் உணவில் வண்டு.. உணவு விநியோகித்த நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம்..!!
நேற்று நெல்லையில் இருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் சாம்பாரில் வண்டுகள் இருந்ததாக புகார் எழுந்த நிலையில், உணவு பொட்டல விநியோக ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது தெற்கு ரயில்வே. பயணிகளின் புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது தெற்கு ரயில்வே.
நவ.16 காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு சென்றுக்கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில், பயணிகளுக்கு வழக்கம் போல் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. அதில் சாம்பாரில் வண்டுகள் செத்து கிடந்துள்ளதை கண்டு பயணி ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பயணி அங்கிருந்த ரயில்வே ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால், ரயில்வே ஊழியர் இது வண்டு இல்லை, சாம்பாரில் உள்ள சீரகம் என்று கூறியுள்ளார். இதனால் பயணிகள் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சீரகத்தில் எப்படி தலை, கால்கள், வால் அனைத்தும் இருக்கும் என அதிகாரிகளிடம் பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து, சாம்பாரில் இறந்து வண்டுகள் மிதந்து இருப்பதை பயணிகள் வீடியோ எடுத்து புகார் அளித்துள்ளனர்.
வந்தே பாரத் ரயிலில் உணவிற்காக மட்டும் ரூ.200 வசூல் செய்கின்றனர். மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ரயிலில் வழங்கப்படும் உணவு, பயனுள்ளதாக இல்லை. தரமான உணவை வழங்க வேண்டும். இது குறித்து மத்திய அமைச்சகம் மற்றும் ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகன் என்ற பயணி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலில், உணவுப் பொட்டலத்தில் வண்டு இருந்த விவகாரம் தொடர்பாக தென்னக ரயில்வே விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், உணவுப் பொட்டலம் விநியோகம் செய்த பிருந்தாவன் ஃபுட் ப்ராடக்ட் நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி, உணவின் மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பயணியின் புகாரைத் தொடர்ந்து உடனடியாக ரயிலிலிருந்து அனைத்து உணவு பொட்டலங்களும் ஆய்வு செய்யப்பட்டதுடன் ரயிலின் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கும் இடமும் ஆய்வு செய்யப்பட்டதில் எந்த குறைபாடும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
குறிப்பாக, பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்வதில் ரயில்வே நிர்வாகம் உறுதியாக உள்ளது. ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் கண்காணித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; புரோ கபடி 2024!. பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அசத்தல் வெற்றி!.