பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி பீர் குடிக்கும் போட்டி..!! வாந்தி எடுத்தால் வெளியேற்றம்..!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமப்புறங்களில் ஜல்லிக்கட்டு, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த வாணக்கன்காடு ஊராட்சி வாண்டான்விடுதி கிராம இளைஞர்கள் சார்பில் வரும் 17ஆம் தேதி பீர் குடிக்கும் போட்டி நடத்த உள்ளதாக அறிவித்து கிராமத்தில் முக்கிய இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டரில், தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மாபெரும் முதலாம் ஆண்டு பீர் குடிக்கும் போட்டி நடத்தப்படுகிறது. நுழைவு கட்டணம் ரூ.1,000 செலுத்த வேண்டும். 36 பேருக்கு மட்டுமே அனுமதி. ஒரு மணி நேரத்துக்குள் 10 பீர் குடிக்க வேண்டும். சைடு டிஷ் மீன் வறுவல் வழங்கப்படும். 10 பீர் குடித்து முதல் இடத்தை பிடிப்பவருக்கு ரூ.5,024, ஒன்பதரை பீர் குடித்து 2வது இடம் பிடிப்பவருக்கு ரூ.4,024, 9 பீர் குடிப்பவருக்கு 3வது பரிசு ரூ.3,024, 8 பீர் குடிப்பவருக்கு 4வது பரிசா ரூ.2,024 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குமட்டினாலோ அல்லது வாந்தி எடுத்தாலோ போட்டியில் இருந்து நீக்கப்படுவர். பாதியில் வெளியேறுபவர் குடித்த பீருக்கு பணம் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். கலந்துகொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வித்தியாசமான போட்டியை வரவேற்றும், எதிர்ப்பு தெரிவித்தும் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஒருசிலர் போட்டியில் கலந்து கொள்வதாக பதிவிட்டுள்ளனர். அதே நேரத்தில் இதுபோன்ற போட்டி இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிப்பதோடு, சமுதாய சீரழிவுக்கு வழிவகுக்கும் என்பதால் போலீசார் அனுமதி வழங்குவார்களா? அல்லது போட்டியை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.