சோசியல் மீடியா யூஸ் பண்ணும்போது கவனம்..!! இதுவரை 36,838 இணைய முகவரிகளை பிளாக் செய்த மத்திய அரசு..!!
2018 - 2023 அக்டோபர் மாதம் வரை சமூக ஊடக நிறுவனங்களில் 36,838 இணைய முகவரிகளை பிளாக் செய்யுமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளதாக அத்துறையின் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ் நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளி மாநிலங்கள் உடனான நட்புறவு அல்லது பொது ஒழுங்கை சீர் குலைக்கும் விதமான அல்லது குற்றங்களைத் தூண்டும் விதமான பதிவுகள் கொண்ட இணையதளங்கள் முடிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தபோது இதனைத் தெரிவித்தார்.
ட்விட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பதிவுகள், கணக்குகள் அல்லது ஹேஷ்டேக்குகளை பிளாக் செய்ய அல்லது அகற்ற மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளின் விவரங்களையும் பகிருமாறு ஜான் பிரிட்டாஸ் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், 2018 முதல் இந்தாண்டு அக்டோபர் வரை அதிகபட்சமாக ட்விட்டர் சமூக வலைத்தள நிறுவனத்துக்கு மத்திய அரசு 13,660 உத்தரவுகளை அனுப்பியுள்ளதாக கூறினார்.
இந்தியாவில் இணையம் பாதுகாப்பாகவும், நம்பகமானதாகவும் இருப்பதையும் அனைத்து பயனர்களும் பொறுப்புணர்வுடன் இருப்பதையும் உறுதி செய்வதுதான் அரசின் கொள்கை என்றும் அவர் தெரிவித்தார். 2018இல் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் தடை செய்யப்பட்ட இணைய முகவரிகள் எண்ணிக்கை 2,799 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு அக்டோபர் வரை 7,502 இணைய முகவரிகள் முடக்கப்பட்டுள்ளன. 2020இல், அதிகபட்சமாக 9,849 இணைய முகவரிகள் சமூக வலைத்தளங்களால் முடக்கப்பட்டன.