உஷார்!. உப்பின் காரணமாக ஆண்டுக்கு 18 லட்சம் பேர் உயிரிழப்பு!. உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!
Salt: உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 18.9 லட்சம் பேர் உப்பு காரணமாக இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே உணவை பதப்படுத்தவும், பாதுகாக்கவும், சுவையை மேம்படுத்தவும் மக்கள் உப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். பண்டைய ரோமில், வணிகத்தில் உப்பு மிக முக்கிய இடத்தை வகித்தது. உதாரணத்திற்கு ரோமானிய படை வீரர்களுக்கு சம்பளமாக உப்பு தான் வழங்கப்பட்டது. உணவில் தேவையற்ற நுண்ணுயிரிகளை கட்டுப்படுத்தி, தேவையான நுண்ணுயிரிகளை வளர அனுமதித்து பதப்படுத்தியாக உப்பு இருக்கிறது. பாக்டீரியா வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் இந்த குறிப்பிடத்தக்க திறன் காரணமாகத்தான் ஊறுகாய் முதல் சீஸ் வரை பல உணவுகளில் உப்பு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
உணவில் உப்பு இல்லாவிட்டால், உணவில் சுவை இருக்காது. இன்று உப்பு இல்லாத வாழ்க்கையை உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இந்தியாவில் உப்புக்கு நாடு தழுவிய இயக்கம் இருந்ததிலிருந்தே உப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் நினைவுக்கூறலாம். தண்டி மார்ச் அல்லது உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட தலைவர்களின் போராட்டமும் எவ்வளவு முக்கியமானது என்பது நாம் அனைவரும் அறிவோம். உப்பு நம் உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும், அதனால் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை லட்சம் பேர் இறக்கிறார்கள் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, தினசரி உணவில் 5 கிராம் உப்பை உட்கொள்வது அவசியம். 5 கிராம் உப்பில் சுமார் 2 கிராம் சோடியம் உள்ளது, இது ஒரு தேக்கரண்டிக்கு சமம். இருப்பினும், மக்கள் வெறும் 5 கிராம் உப்பை மட்டும் சாப்பிடாமல் இருமடங்காகப் பயன்படுத்துகிறார்கள். அதாவது, உலகளவில் மக்கள் தினமும் சராசரியாக 11 கிராம் உப்பு சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக, இதய நோய், இரைப்பை புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ், உடல் பருமன் மற்றும் சிறுநீரக நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 18.9 லட்சம் பேர் உப்பு காரணமாக இறப்பதாக மதிப்பிடுகிறது. இந்த மரணங்களில் உப்பு நேரடி பங்கு வகிக்காது. மாறாக, மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் நோய்களின் நிகழ்வு மற்றும் முன்னேற்றத்தில் உப்பு ஒரு பங்கு வகிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனால்தான் உப்பை குறைவாக பயன்படுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் எப்போதும் பரிந்துரைக்கின்றனர். சர்க்கரை விஷயத்திலும் இதுபோன்ற அறிவுரைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.