கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்த பிசிசிஐ..!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ICC ஆண்கள் T20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. 2007ஆம் ஆண்டுக்கு பின் டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியா தற்போது கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் 11 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, வெற்றி பெற்ற அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார், மேலும் இந்தியாவின் சிறந்த சாதனைக்கு பங்களித்த வீரர்கள் மற்றும் அனைத்து பயிற்சியாளர் ஊழியர்களையும் வாழ்த்தினார்.
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா-வின் பதிவில், "ICC ஆடவர் T20 உலகக் கோப்பை 2024ஐ வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். போட்டி முழுவதும் அந்த அணி சிறப்பான திறமை, உறுதிப்பாடு மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்!" என்று பதிவிட்டிருந்தார்.
கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி, ஐசிசியின் வெற்றிப் பரிசான 21.96 கோடி ரூபாயையும் வென்றது. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான பரபரப்பான வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.