வங்கி மோசடி!… ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், நரேஷ் கோயலுக்கு சொந்தமான ரூ.538 கோடி சொத்துகள் முடக்கம்!… அமலாக்கத்துறை அதிரடி!
ஜெட் ஏர்வேஸ் பண மோசடி வழக்கில் அதன் உரிமையாளர் நரேஷ் கோயல் மற்றும் குடும்பத்தினரின் ரூ.538 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கடந்த 2011 முதல் 2019ம் ஆண்டு வரை, கனரா வங்கியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் தொகை வழங்கப்பட்டது. இந்த கடன் தொகையை நிறுவனத்திற்கு செலவிடாமல், தனிப்பட்ட செலவுகளுக்காக பயன்படுத்தியதாக வங்கி சார்பில் அமலாக்கத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் நரேஷ் கோயல் மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, நரேஷ் கோயலுக்கு எதிராக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, நரேஷ் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.598 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல், மகன் நிவான் கோயல் ஆகியோருக்கு சொந்தமான 17 குடியிருப்புகள்/ பங்களாக்கள் மற்றும் வணிக வளாகங்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் உள்ளிட்டவையும் அடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.