வங்கதேச வன்முறை..!! சிறையில் இருந்து தப்பியோடிய 595 கைதிகள்..!! பயங்கர ஆயுதங்களுடன் காத்திருப்பதால் பரபரப்பு..!!
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்நிலையில், அந்நாட்டில் அமைதியின்மை தொடர்கிறது. தற்போது ஷெர்பூரில் உள்ள பாரிய சிறையில் மோதல் வெடித்துள்ளது. நேற்றைய தினம் ஏற்பட்ட மோதலில் 596 கைதிகள் தப்பியுள்ளனர். தப்பியோடிய கைதிகள் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த சிறைச்சாலை இந்தியா - வங்கதேச எல்லையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால், இந்திய எல்லைப்பகுதியில் அதிக பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையானது (பிஎஸ்எஃப்) எல்லையில் மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் அதன் பாதுகாப்புப் பணியை அதிகரித்துள்ளது. தப்பியோடியவர்களில் 20 பேர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தில் நடந்தது என்ன..?
அரசு வேலைகளில் சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்யக் கோரி அந்நாட்டு மாணவர்கள் கடந்த மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதியாக தொடங்கிய இந்த போராட்டங்கள், திடீரென வன்முறையாக மாறி வங்காளதேசம் முழுவதும் பரவியது. 1971 போரில் கலந்து கொண்ட வீரர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலைகளில் 30% இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
இந்த வன்முறை காரணமாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்தது. இருப்பினும், இது போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. இந்த வன்முறையில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.