பதவி ஏற்ற அடுத்த நொடி...! திறந்த வெளிகளில் இறைச்சி விற்பனை செய்ய தடை...! ம.பி அரசு போட்ட உத்தரவு...
பொது இடங்களில் மத வழிபாட்டு இடங்களில் கட்டுப்பாடற்ற ஒலிபெருக்கிகள் வைக்க தடை, அதேபோல திறந்த வெளிகளில் இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் அரசு முதல் முக்கிய முடிவுகளாக எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் உயர்கல்வி அமைச்சரும், மூன்று முறை உஜ்ஜைன் எம்.எல்.ஏ.வுமான மோகன் யாதவ், மத்திய பிரதேசத்தின் 19வது முதலமைச்சராக புதன்கிழமை பதவியேற்றார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் யாதவுக்கு ஆளுநர் மங்குபாய் சி.படேல் போபாலின் லால் பரேட் மைதானத்தில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பொது இடங்களில் மத வழிபாட்டு இடங்களில் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி கட்டுப்பாடற்ற ஒலிபெருக்கிகள் வைக்க தடை விதித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. ஒலி மாசுபாடு மற்றும் சட்ட விரோதமாக ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படைகளை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த குழுக்கள், ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படும் மத மற்றும் பொது இடங்களை தவறாமல், சீரற்ற முறையில் ஆய்வு செய்து, விதிமுறைகளை மீறும் பட்சத்தில், அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள் விசாரித்து, அறிக்கையை நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பார்கள். மேலும், மதத் தலைவர்களுடனான தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பின் அடிப்படையில் ஒலிபெருக்கிகளை அகற்ற அரசு முயற்சிகளை மேற்கொள்ளும். அதேபோல திறந்த வெளிகளில் இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.