இந்த பெயரில் இருக்கும் தீபம் ஏற்றும் எண்ணெய்யை விற்க தடை..!! சென்னை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!!
தீபம் என்ற பெயரில் விளக்கேற்றும் எண்ணெய் வகைகள் விற்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த காளீஸ்வரி நிறுவனம் டிரேட் மார்க்குடன் எண்ணெய் வகைகளையும் 5-க்கும் மேற்பட்ட விளக்கேற்றும் எண்ணெய் வகைகளையும் விற்பனை செய்து வரும் பிரபல நிறுவனமாக இருந்து வருகிறது. இதில், தீபம் விளக்கேற்றும் எண்ணெய் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவையை சேர்ந்த செல்வமாதா ஆயில் நிறுவனம் துர்கா தீபம் விளக்கேற்றும் எண்ணெய் என்ற பெயரில் தங்களுடைய டிரேட் மார்க்கான தீபம் என்ற பெயரை பயன்படுத்தி விற்பனை செய்து வருவதாகவும், இதனால் தங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் தீபம் என்ற தங்களுடைய டிரேட் மார்க்கை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் காளீஸ்வரி நிறுவனம் சார்பில் சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, தீபம் விளக்கேற்றும் எண்ணெய் உலக அளவில் சந்தைப்படுத்த முயற்சி எடுத்து வரும் நிலையில், தங்கள் நிறுவனத்தின் தீபம் என்ற டிரேட் மார்க் சில நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி லாபமடைந்து வருவதாக காளீஸ்வரி நிறுவனம் தெரிவித்தது. மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி நடக்கும் வணிகத்தில் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, தீபம் என்ற டிரேட் மார்க் பெயரை பயன்படுத்தி விளக்கேற்றும் எண்ணெய் வகைகளை விற்க செல்வமாதா ஆயில் நிறுவனத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.