எலக்ட்ரிக் ஆட்டோ-வை அறிமுகம் செய்யும் பஜாஜ்..! அப்டேட் கொடுத்த நிறுவனம்!
பிரபல பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அடுத்தடுத்து புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விரைவில் எலக்ட்ரிக் ஆட்டோ-வை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது சந்தையில் பயன்பாட்டில் உள்ள எலக்ட்ரிக் ஆட்டோ-க்களின் விலைக்கு நிகராக தரமான வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம் என பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, உலகிலேயே மூன்று சக்கர வாகன உற்பத்தியில் பஜாஜ் ஆட்டோ தான் முதலிடத்தில் இருக்கிறது என தெரிவித்தார். தற்போது சந்தையில் 88 சதவீதம் தங்கள் கைவசம் இருப்பதாக கூறிய ராஜீவ் பஜாஜ் உலகமே பசுமையை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் அந்த பொறுப்பினை உணர்ந்து தங்களது நிறுவனமும் மின்சார வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
குறிப்பாக ஈ- ஆட்டோ மற்றும் ஈ- கார்கோ வாகனங்களில் தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நல்ல வளர்ச்சியை கண்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தியாவில் மின்சார ஆட்டோக்களுக்கான சந்தையை போலவே எலக்ட்ரிக் ஆட்டோ-க்களுக்கான சந்தையும் பிரகாசமாக உள்ளது எனக் கூறுகிறார். ஒரு மாதத்திற்கு தங்களது நிறுவனம் 50,000 முதல் 60,000 மின்சார ஆட்டோக்களை விற்பனை செய்வதாக கூறுகிறார்.
இந்திய சந்தையில் தற்போது விற்கப்படும் ஈ- ரிக்ஷாக்கள் தரம் குறைவான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என்றும் தெரிவித்தார். எனவே தங்கள் நிறுவனம் ஈ- ரிக்ஷா உற்பத்தியில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளார்.
கூடுதலாக, ரூ.1 லட்சம் என்ற விலையில் சேட்டாக்கின் மின்சார வாகனத்தை இந்த மாதத்திலேயே அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் கூறியுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளில் 8 மின்சார வாகனங்கள் சேட்டாக் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.