மோசமான காற்று மாசு!… 4 மாநிலங்கள்தான் காரணம்!… உடனடியா இத நிறுத்துங்க!... உச்சநீதிமன்றம் அதிரடி!
கடந்த சில தினங்களாக நிலவி வரும் காற்று மாசுபாடு, டெல்லியில் தரக் குறியீடு 400-க்கும் மேல் உள்ளது. இது மிகவும் அபாயகரமானது சாதாரண சுவாசப் பாதை கோளாறு உள்பட ஆஸ்துமா தொடங்கி நுரையீரல் புற்றுநோய் வரை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு காற்றின் தரம் அங்கு மோசமாக உள்ளது. இதனால், டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் 11-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் ஊழியர்கள் பலருக்கும் வீட்டிலிருந்து பணிபுரியும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களை பதிவு எண் அடிப்படையில் ஒற்றை, இரட்டை இலக்க எண்கள் கொண்டு பயணத்துக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதான்சு துலியா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, பஞ்சாப் மாநிலத்தின் அட்டர்னி ஜெனரல் ஆஜராகி, "பஞ்சாப்பில் பயிர்க் கழிவு எரிப்பது என்பது வெறும் 20 முதல் 50 நாட்கள் மட்டுமே நடக்கும் நிகழ்வு. அதனால் மட்டுமே டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்படவில்லை" என்றார். அதற்கு நீதிபதி கவுல், "எத்தனை நாட்கள் நடைபெறுகிறது என்பதல்ல, எந்தக் காலக்கட்டத்தில் அது நடக்கிறது என்பதுதான் இங்கே பிரச்சினை.
நீங்கள் பயிர்க் கழிவு எரிக்கப்படுவதை எப்படித் தடுப்பீர்கள் என்று எங்களுக்குத் தெரியாது. நீங்கள் கட்டாயப்படுத்தி நிறுத்துவீர்களோ அல்லது ஊக்கத் தொகை கொடுத்து நிறுத்துவீர்களோ அது தெரியாது. ஆனால், பயிர்க் கழிவு எரிப்பதை உங்கள் மாநிலத்தில் உடனடியாக நிறுத்துங்கள் என்று உத்தரவிட்டார். ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் இதே நிலை தொடரவும் விட முடியாது" என்றார். பஞ்சாப் மட்டுமல்லாது உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களும் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.