அயோத்தி குழந்தை ராமர் சிலை ஊர்வலம் திடீர் ரத்து!… ராம ஜென்மபூமி அறக்கட்டளை அறிவிப்பு!
அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை ராமர் சிலை ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை அறிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத வழிபாட்டுத்தலமான ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது, அயோத்தி ரயில் நிலையமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் குடமுழுக்கு விழா, வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே, கோயிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்ய, 2 சிலைகள் தயார் செய்யப்பட்டன. அதில் ஒரு சிலை ஏற்கனவே அங்கு கடந்த 1949-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிலையாகும். இது உற்சவர் சிலையாக இருக்கும். மற்றொரு சிலை, ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
அதில், 5 வயதுடைய குழந்தை வடிவிலான ஒரு சிலை, அறக்கட்டளை நிர்வாகிகள், ஓட்டெடுப்பு வாயிலாக தேர்வு செய்யப்பட்டது. அதாவது, கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த சிற்ப கலைஞர் அருண் யோகிராஜ் வடிவமைத்த குழந்தை ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டது. இந்த சிலைதான் வருகிற 22-ந்தேதி அன்று அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இதனிடையே, கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை ராமர் சிலையை காண மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது. அந்த குழந்தை ராமர் சிலை எப்படி இருக்கும் என்று வடமாநில மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையடுத்து மூலவர் ராமர் சிலையை வருகிற 17-ந்தேதி உலகுக்கு காட்ட ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை முடிவு செய்துது. அன்றைய தினம் (17-ந்தேதி) குழந்தை ராமர் சிலை அயோத்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், 17-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறவிருந்த குழந்தை ராமர் சிலை ஊர்வலத்தை ராம ஜென்மபூமி அறக்கட்டளை ரத்து செய்துள்ளது. அதற்கு பதிலாக, அதே நாளில் ராம ஜென்மபூமியின் வளாகத்தில் குழந்தை ராமர் சிலையை பார்வையிட ஏற்பாடு செய்யப்படும் என்று அறக்கட்டளையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். அயோத்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவிருக்கும் குழந்தை ராமர் சிலையை தரிசனம் செய்ய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வரும்போது, பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் ஊர்வலம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.