ஐயப்ப பக்தர்களே!… சபரிமலையில் கட்டுப்பாடுகள் விதிப்பு!… கூட்டநெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை!
சபரிமலையில் அதிகரித்துவரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வரும் நிலையில், உடனடி முன்பதிவு மையங்களிலும் ஏராளமானோர் பதிவு செய்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 38 நாட்களில் இதுவரை 25.69 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் 97 ஆயிரத்து 286 பேர் ஐயப்பனை வழிபட்டுள்ளனர்.
இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த், மண்டல பூஜை குறித்த விவரங்களை தெரிவித்தார். மண்டல பூஜையையொட்டி, நாளை 64 ஆயிரம் பேருக்கும், புதன்கிழமை 70 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்படும் என்றார். ஜனவரி முதல் நாளொன்றுக்கு 80 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்யலாம் எனவும், நாளொன்றுக்கு 15 ஆயிரம் பேருக்கு ஸ்பாட் புக்கிங் எனப்படும் உடனடி முன்பதிவு டிக்கெட் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
வருகிற 27ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு மண்டலக்காலம் நிறைவு பெறும். மீண்டும் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மாலை மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். பின்னர் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் செய்யப்படும். தொடர்ந்து ஜனவரி 19ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஜனவரி 20ஆம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.