70 வயது கடந்த மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் சேர்க்கை அடையாள அட்டைகள் 25 லட்சத்தை எட்டியுள்ளது...!
மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் சேர்க்கை அடையாள அட்டைகள் 25 லட்சத்தை எட்டியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பிரதமரால் மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் திட்டம் தொடங்கப்பட்டு 2 மாதகாலத்தில் அதில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சம் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ரூ.40 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் 70 வயது நிறைவடைந்த அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள மூத்த குடிமக்கள் 22000 பேருக்கு பயனளிக்கிறது. இருதய பரிசோதனை, இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை, பித்தப்பை அகற்றுதல், கண்புரை அறுவை சிகிச்சை, புரோஸ்டேட் அறுவை சிகிச்சை, பக்கவாதம், ஹீமோடையாலிசிஸ், குடல் காய்ச்சல் மற்றும் பிற காய்ச்சல் போன்ற பல்வேறு உபாதைகளுக்கு மூத்த குடிமக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
2024 அக்டோபர் 29 அன்று, பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தை தொடங்கி வைத்தார். 70 வயது நிறைவடைந்தவர்கள் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களையும் இத்திட்டத்தில் இணைக்கும் வகையில் இதனை விரிவுபடுத்துவதாக அறிவித்தார். இதன்படி, அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது அவர்களுக்கு சுகாதாரப் பயன்களைப் பெற உதவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.