அதிகாலையில் அதிர்ந்த அயோத்தி!.. ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு!… அச்சத்தில் மக்கள்!
அயோத்தில் அதிகாலையில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று அதிகாலையில் நேபாளத்தில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று இரவு 11.47 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. காத்மாண்டுவில் இருந்து 550 கிமீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் உள்ள ராமிதாண்டாவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த போது, டெல்லி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நேபாளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஜாஜர்கோட் மற்றும் ருகும் மேற்கு ஆகிய இரண்டு மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜாஜர்கோட்டில் குறைந்தது 105 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 105பேர் காயமடைந்துள்ளனர். ருகும் மேற்கு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 52 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 85 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்றுவருவதால், நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக மீட்புப்பணியில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று(ஞாயிற்றுக் கிழமை) அதிகாலை 1 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதாவது, அயோத்திக்கு வடக்கே 215 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தின் சேதம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.