அயோத்தி ராமர் சிலை வடிவமைக்கப்பட்ட கல்!… விவசாயிக்கு ரூ.80,000 அபராதம் விதித்த அதிகாரிகள்!… இதுதான் காரணம்!
ராமர் சிலை செய்வதற்காக நிலத்தில் இருந்து கல்லைத் தோண்டி எடுத்ததுக்குச் சட்ட விரோத சுரங்கப்பணி செய்ததாகக் கூறி விவசாயிக்கு 80,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள குஜ்ஜேகவுடனாபுரா கிராமத்தில் வசிப்பவர் ராம்தாஸ். உடற்பயிற்சி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். தனது 2.14 ஏக்கர் நிலத்தில் உள்ள பாறைகளை விவசாயத்துக்காக அகற்ற முடிவு செய்து இருக்கிறார். உள்ளூர் குவாரி ஒப்பந்ததாரர் ஸ்ரீநிவாஸ் நடராஜ் என்பவரை பாறையை அகற்றும் பணிக்காக நியமித்துள்ளார். நடராஜ் பெரிய பாறையை மூன்றாகப் பிளந்துள்ளார். பிளந்த ஒரு பாறையை அகற்ற பல நாள்கள் ஆகும் என்ற நிலையில்தான், மன்னையா பாடிகர், நரேந்திர ஷில்பி மற்றும் கோபால் ஆகியோர் ராமர் சிலைக்காக ஒரு கல் தேவைப்படுகிறது என அவரை தொடர்புகொண்டுள்ளனர்.
ராம்தாஸ் என்பவரின் நிலத்தில் 10 அடியில் மூன்று பெரிய பாறைகள் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அவர்களும் ராம்தாஸின் நிலத்தில் உள்ள பாறைகளை வந்து பார்த்து ஒன்றைச் சோதனைக்காக அயோத்திக்கு எடுத்துச் சென்றுள்ளனர். சிற்பி அருண் யோகி ராஜ் அந்தக் கல்லை ராமர் சிலை செய்ய தேர்வு செய்திருக்கிறார். ஆனால், கோயில் திறப்பு விழாவுக்கு பாறையைக் கொடுத்த ராம்தாஸுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதற்கு உதவிய குவாரி ஒப்பந்ததாரர் ஸ்ரீனிவாஸ் நடராஜையும் அழைக்கவில்லை. இந்த கல்லை அயோத்திக்குக் கொண்டு செல்ல நாங்கள் சுமார் 6 லட்சம் ரூபாய் வரை செலவானதாகவும் ஆனால், அறக்கட்டளையுடன் தொடர்புடைய ஸ்ரீநாத் என்ற நபரிடம் இருந்து இதுவரை 1.95 லட்சம் ரூபாய் மட்டுமே பெறபட்டதாகவும் கூறப்படுகிறது.