மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா: அதிகாலையிலேயே மண்டபம் வந்த விஜய்…! கேரள பௌன்சர்ஸ் தீவிர சோதனை..!
TVK vijay: கடந்த 2022 -2023 கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோல 2-வது ஆண்டாக, இந்த ஆண்டும் 2023 -2024 கல்வியாண்டில் தொகுதிவாரியாக முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா இன்று நடைபெற உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நடிகராக மாணவர்களை சந்தித்த விஜய் தற்போது தவெக என்று அரசியல் கட்சியின் தலைவராக மக்களை சந்திக்க உள்ளார்.
இன்று காலை 9 மணியளவில் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் நிகழ்வில், முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி. தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறார்.
இந்த விழாவில் நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் சிறிது நேரம் உரையாட உள்ளார். அதன்பிறகு வழக்கமான நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சி முடிந்தவுடன் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை நடிகராக பரிசுகள் வழங்கிய அவர், இம்முறை கட்சித் தலைவராக பரிசுகள் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காலை 9 மணிக்கு நடைபெறும் இந்த விழாவிற்கு அதிகாலை 6.30 மணிக்கே நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்கு வருகை தந்துள்ளார் தவெக தலைவர் விஜய். கடந்த முறை விழா தொடங்கும் போது வருகை தரும் வேளையில் கூட நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக, தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகாலையிலையே மண்டபத்திற்கு வந்துள்ளார்.
மேலும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வழக்கமாக தமிழகத்தை சேர்ந்த பௌன்சர்கள் தான் பணியில் இருப்பார்கள். இந்தமுறை தற்போது ஹாலிவுட் நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான் போன்றவர்களுக்கு பணியாற்றக்கூடிய பௌன்சர்கள் பணியில் உள்ளனர்.