"அதிகாரமிக்க நபர்கள் என்னிடம் பேசினார்கள்". சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி பரபரப்பு தகவல்
சவுக்கு சங்கர் வழக்கில் இரு நீதிபதிகளும் இரு வேறு தீர்ப்பு வழங்கியுள்ளதால், வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடும்படி, வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதிக்கு, நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.
சவுக்கு சங்கரின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என அதிகாரமிக்க நபர்கள் தெரிவித்ததாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார். பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என உத்தரவாத மனு தாக்கல் செய்ய சவுக்கு சங்கர் தரப்புக்கு, நேற்று முன்தி்னம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கர் தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு அரசு தலைமை வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார்.
அதேபோல மனுவை ஏற்கக் கூடாது என பத்திரிகையாளர் சந்தியா, தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி தரப்பில் இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. சவுக்கு சங்கரின் தாய் தரப்பில், சவுக்கு சங்கர் கருத்தால் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. பொது சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் முன் நான்கு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்குகள், குண்டர் சட்ட உத்தரவில் குறிப்பிடவில்லை என வாதிடப்பட்டது. தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அனைத்து நடைமுறையும் பின்பற்றி தான் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில், பிளாக்மெயிலரான சவுக்கு சங்கரால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய மனுவை ஏற்றுக் கொள்ள வேண்டும், தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் மற்றும் நீதித்துறையினர் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதால், அவர் தண்டிக்கப்பட வேண்டிய நபர் என வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட இரு நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்த வழக்கின் உத்தரவின்போது பேசிய நீதிபதி சுவாமிநாதன், அதிகாரமிக்க நபர்கள் இந்த வழக்கு தொடர்பாக தன்னிடம் பேசியதாகவும், அந்த நபர்கள் தங்கள் நோக்கத்தை அடைந்து விடுவர் என்பதால், அட்வகேட் ஜெனரல் வழக்கை ஒத்திவைக்க கோரியபோதும் அவசரமாக இறுதி விசாரணைக்கு இந்த வழக்கை எடுத்துக் கொண்டதாக விளக்கமளித்தார்.
பின்னர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவில், சவுக்கு சங்கருக்கு எதிரான போதைப்பொருள் வழக்கை குறிப்பிடவில்லை எனவும், கைது செய்யப்பட்ட எந்த வழக்கிலும் ஜாமீன் வழங்கப்படாததால், உடனடியாக விடுதலையாக வாய்ப்பில்லை எனவும், காவல் துறை மனு செலுத்தாமல் குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
அதேசமயம், நீதிபதி பாலாஜி, சவுக்கு சங்கரின் தாய் மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு அனுமதியளித்த பின் ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
இரு நீதிபதிகளும் இரு வேறு தீர்ப்பு வழங்கியுள்ளதால், வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடும்படி, வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதிக்கு, நீதிபதிகள் பரிந்துரைத்தனர். இருப்பினும், கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என இரு நீதிபதிகளும் ஒருமித்த கருத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Read More: