"பாரத் மாதா கி ஜே..!" ஏய், மஞ்சள் டிரஸ் உடனடியா வெளியே போ..! பொறுமையிழந்த மத்திய அமைச்சர் மீனாக்ஷி லேகி.! அதிர்ச்சி வீடியோ.!
கேரளாவில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய வெளி விவகாரம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மீனாட்சி லேகி, கூடியிருந்த மாணவர்களிடம் நடந்து கொண்ட விதம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கேரளாவின் கோழிக்கோட்டில் வலதுசாரி அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தனது உரையின் முடிவில் வட மாநிலங்களைப் போல 'பாரத் மாதா கி ஜே' என உரக்க கோஷம் எழுப்பினார். ஆனால் மாநாட்டில் அமர்ந்திருந்த யாரும் 'பாரத் மாதா கி ஜே' என்ற கோஷத்தை திரும்ப எழுப்பவில்லை. இதனால் கோபத்தின் எல்லைக்கே சென்ற மத்திய அமைச்சர் பாரதம் உங்கள் தாய் இல்லையா என ஆக்ரோஷமாக கத்தினார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் 'பாரத் மாதா கி ஜே' என அவர் கோஷம் எழுப்பிய போது ஒரு சிலர் மட்டுமே அவரை பின்தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதனால் மீண்டும் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை பார்த்து 'பாரத் மாதா கி ஜே' சொல் என கட்டளையிட்டார். இதனைப் பொருட்படுத்தாத அந்த பெண் கோஷமிடாமல் அமைதியாக இருந்தார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை நோக்கி மஞ்சள் நிற ஆடை அணிந்திருக்கும் பெண்ணே நான் உன்னை பார்த்து மீண்டும் ஒருமுறை கேட்கிறேன் 'பாரத் மாதா கி ஜே' என்று கோஷமிடு என கோபத்துடன் கூறினார். அந்தப் பெண் மீண்டும் அமைதியாக இருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மத்திய அமைச்சர் அந்தப் பெண்ணை மாநாட்டில் இருந்து வெளியேறுமாறு கோபத்தில் கத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் 'பாரத் மாதா கி ஜே' கோஷமிடாதவர்கள், இந்தியாவைப் பற்றி பெருமையாக நினைக்காதவர்கள், இந்த இளைஞர் மாநாட்டு திடலில் இருந்து வெளியேறலாம் என ஆத்திரத்தில் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் மாநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.