பட்டாசு வெடிக்கும்போது இதை மறந்துடாதீங்க..!! செல்லப்பிராணிகளின் உயிருக்கே ஆபத்து..!!
தீபாவளிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடிக்க ரெடியாகி வரும் நிலையில், அனைவரும் ஒரு விஷயத்தை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். பட்டாசு சத்தம் காரணமாக நாய்கள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அவற்றிற்கு அதிக தீங்கு ஏற்படாத அளவில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
நாய்கள் உள்ளிட்ட விலங்களும், பறவைகளும் வெடி சத்தம் கேட்டு மிகவும் பயப்படும் என்பதால், அதிக சத்தம் தரும் வெடிகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை வெளியே விடாமல், வீட்டுக்குள் வைத்திருப்பது பாதுகாப்பானது. அந்தவகையில், மதுரையில் செயல்பட்டு வரும் "Safe Home Foundation" அமைப்பு, ஆண்டு தோறும் தீபாவளி சமயத்தில், பட்டாசு வெடிப்பால் பாதிப்புக்கு உள்ளாகும் தெரு நாய்களுக்கு சிகிச்சை அளித்துப் பராமரிக்கிறது.
சாருஹாசன், நவீத் ஆகியோர் இணைந்து நடத்தி வரும் "Safe Home Foundation" அமைப்பில் கால்நடை மருத்துவர்கள், பணியாளர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். தீபாவளியையொட்டி, வாயில்லா ஜீவன்கள் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்தும், அவற்றைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அதாவது, தீபாவளி பட்டாசுகளால் நாய்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்: நகரங்களைப் பொறுத்தவரை எல்லா தெருக்களிலும் நூற்றுக்கணக்கான தெரு நாய்கள் உள்ளன. மதுரையை எடுத்துக்கொண்டால் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான தெரு நாய்கள் உள்ளன. தீபாவளி பட்டாசால் அவற்றிற்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து காக்க, எல்லா நாய்களையும் பிடித்து, பாதுகாப்பான இடத்தில் வைப்பது நடைமுறையில் இயலாத காரியம். பட்டாசுகளை வெடிப்பதை குறைத்துக் கொள்வது தான் நாய்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஒரே வழி. பொதுமக்களாகவே, பட்டாசு இன்றி தீபாவளியைக் கொண்டாடுவது தான் மாசுபாட்டைக் குறைக்கவும், பறவைகள், விலங்குகள் என உயிரினங்களைக் காக்கவும் வழி.
பட்டாசுகள் வெடித்து வாயில் அடிபட்டு, உடலில் அடிபட்டு இருப்பதாக தீபாவளி சமயத்தில் எங்களுக்கு புகார்கள் நிறைய வரும். பட்டாசு சத்தத்தால், நாய்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கும். இதனால், சாலைகளில் பயந்து போய் வேகமாக ஓடும். அப்போது வண்டிகள் வந்தால் குறுக்கே விழுந்து விபத்துகளும் ஏற்படக்கூடும். இதனால் அதிக சத்தத்தோடு வெடிக்கும் பட்டாசுகளை போடாமல் இருப்பது நல்லது. இதனால், நாய்கள் மன அழுத்தம் கொள்ளாமல் காக்க முடியும்.
பட்டாசு புகையால், நாய்கள் அருகில் இருந்தால் தான் பாதிக்கப்படும். ஆனால், அணுகுண்டு, சரவெடி, பெரிய வெடிகளின் சத்தத்தால் பக்கத்து தெருவில் இருக்கும் நாய்கள் கூட அதிர்ச்சி அடைந்துவிடும். எங்காவது ஓடி ஒளிந்தால் கூட சத்தம் அதிகமாக கேட்பதால் அதிக மன அழுத்தத்தால் நாய்கள் பாதிக்கப்படும். எனவே, சத்தம் வரும் வெடிகளை தவிர்த்து புஸ்வானம் போன்ற பட்டாசுகளை பயன்படுத்தலாம். இதன் மூலம், ஒளிந்திருக்கும் நாய்களையாவது காக்கலாம்.
சிறுவர்கள் சிலர், அல்லது பெரியவர்களே தெரு நாய்களின் வாயில் வெடியை வைத்து விடுவது, வாலில் வெடிகளைக் கட்டிவிட்டு வெடிக்கச் செய்வது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் வாய் வெடித்துச் சிதறி மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். நாய்களைத் துன்புறுத்தும் மிக மோசமான செயலில் ஈடுபடுகின்றனர். கடந்த ஆண்டு கூட நான்கைந்து கேஸ்கள் இதுபோல வந்தன.
வீட்டில் வளர்க்கும் நாய்களைப் பொறுத்தவரை, தீபாவளி சமயத்தில் பாதுகாக்க சில எளிமையான வழிகளைச் செய்யலாம். பொதுவாக நாய்களை வெளியே கட்டிப் போட்டிருப்பார்கள். பட்டாசு அதிகம் வெடிக்கும் நேரங்களில் நாய்களை அவிழ்த்து வீட்டுக்குள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். நாய்கள் நன்றாக தூங்கும் வகையில் பெட் வசதி செய்து கொடுத்தால், அவற்றிற்கு ஸ்ட்ரெஸ் குறையும். தீபாவளியன்று வெடி வெடிக்கும் சமயத்தில் நாய்களை வெளியில் அழைத்துச் செல்லாமல் இருப்பது நல்லது.
வெடி வெடிக்கும் சமயத்தில் நாய்களை கட்டிப் போடவே கூடாது. பால்கனி உள்ளிட்ட உயரமான இடங்களில் வைத்திருக்கக் கூடாது. வெடி சத்தத்தில் அதிர்ச்சி அடைந்து நாய்கள் தவறி விழுந்துவிடக் கூடிய அபாயம் இருப்பதால், நாய்களை கட்டிப் போடாமல் வீட்டுக்குள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். முடிந்தால் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மட்டும் நாய்களை தனி அறையில் வைத்து, அமைதியாகப் பார்த்துக் கொள்ளலாம்.நாய்கள் தீபாவளி சமயத்தில் மாரடைப்பால் உயிரிழப்பதும் நடக்கும். விலங்குகள் மட்டுமல்லாது பறவைகளின் இயல்பு வாழ்க்கையும் அதிக பட்டாசு சத்தத்தால் கடுமையாக பாதிக்கப்படும்.