ஐஸ்வர்யா ராய்-க்கு என்ன ஆச்சு? கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பு!
பாலிவுட்டின் முன்னணி நடிகையான முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கையில் கட்டுடன் தனது மகள் ஆராத்யாவுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடந்த மே 14-ஆம் தேதி 77-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் தொடங்கப்பட்ட நிலையில், பல்வேறு இந்திய பிரபலங்கள் இந்த ஆண்டு அந்த விழாவுக்கு படையெடுத்து வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில், பாலிவுட் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை பலர் அந்த விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் உள்ள ரிவியரா என்ற இடத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் நேற்று இரவு மும்பை விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் புறப்பட்டு சென்றார். அவர் மும்பை விமான நிலையத்திற்கு வந்தபோது அவரது கையில் கட்டுபோடப்பட்டு இருந்தது.
ஐஸ்வர்யா ராய் பத்திரிகையாளர்களை பார்த்து கையை காட்டிவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார். அவர் கையில் கட்டுடன் பிரான்ஸ் செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருக்கிறது. நெட்டிசன்கள் அனைவரும் ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆனது என்று கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.
ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கெட் வெல் சூன் ஐஸ்வர்யா என பதிவிட்டு வருகின்றனர். ஐஸ்வர்யா ராய்க்கு லேசாக காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஒவ்வொரு வருடமும் மிஸ் பண்ணாமல் ஐஸ்வர்யா ராய் சென்று விடும் நிலையில், அடிபட்டு இருந்தாலும் இந்த ஆண்டு அதை மிஸ் செய்யக் கூடாது என கிளம்பியிருக்கிறார். விரைவில் அட்டகாசமான ஆடைகளில் கேன்ஸ் விழாவை ஐஸ்வர்யா ராய் அலங்கரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.