ராகுல் காந்தி மீது கொலை முயற்சி வழக்கு.. அடுத்த பரபரப்பை கிளப்பிய பாஜக...!
எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய காவல்துறையில் பாஜக புகார் அளித்துள்ளது.
மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 17-ம் தேதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கட்சி தலைவர்களும் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இந்த விவகாரம் நேற்று எதிரொலித்தது. நீல நிற உடை அணிந்த இண்டியா கூட்டணி எம்.பி.க்கள், ‘‘உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்’’ என கோஷமிட்டபடி அம்பேத்கர் சிலையில் இருந்து, நாடாளுமன்ற நுழைவுவாயில் நோக்கி பேரணி சென்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, கனிமொழி உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு போட்டியாக, பாஜக எம்.பி.க்களும் போராட்டம் நடத்திகோஷமிட்டனர். சிலர் நாடாளுமன்ற நுழைவுவாயிலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் நுழைய முயன்றனர். இதனால், இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாடாளு மன்றத்துக்குள் நுழைய முயன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பாஜக எம்.பி.க்கள் தடுத்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, ஒடிசாவை சேர்ந்த பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி (69), உத்தரபிரதேச பாஜக எம்.பி. முகேஷ் ராஜ்புத் ஆகியோர் கீழே விழுந்தனர்.
சாரங்கி எம்.பி.யின் நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. அருகே இருந்த எம்.பி.க்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ‘‘சாரங்கியின் தலையில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து ரத்தம் அதிக அளவில் வெளியேறியது. காயம்பட்ட இடத்தில் தையல் போடப்பட்டது. எம்.பி. முகேஷ் ராஜ்புத்துக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. இருவருக்கும் தலையில் சி.டி. ஸ்கேன், இதய பரிசோதனை செய்யப்பட்டது.
ராகுல் காந்தி மீது வழக்கு:
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி அனுராக் தாக்கூர், "ராகுல் காந்தி மீது தாக்குதல் மற்றும் வன்முறையைத் தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் அளித்துள்ளோம். என்டிஏ கூட்டணி எம்.பி.க்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போது என்ன நடந்தது என்பதை விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம். 109, 115, 117, 125, 131 மற்றும் 351 ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் அளித்துள்ளோம். பிரிவு 109 கொலை முயற்சி, பிரிவு 117 தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துவது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யும்படி புகார் அளித்துள்ளோம்" என்றார்.