உக்ரைன் போர் பகுதிக்கு இந்தியர்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு!… CBI அதிரடி!
CBI: வெளிநாட்டில் வேலை வழங்குவதாக கூறி, ரஷ்யா-உக்ரைன் போர் மண்டலத்திற்கு இந்தியர்களை அழைத்துச் சென்ற பெரிய மனித கடத்தல் வலையமைப்பை முறியடித்துள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தெரிவித்துள்ளது.
ரஷ்ய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த சில வாரங்களுக்கு பிறகு மத்திய புலனாய்வு பிரிவு(சிபிஐ) ஆட்சேர்ப்பு நிறுவங்களில் நேற்று நாடுமுழுவதும் சோதனை நடத்தியது. அதாவது, டெல்லி, திருவனந்தபுரம், மும்பை, அம்பாலா, சண்டிகர், மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், வெளிநாட்டில் வேலை வழங்குவதாக உறுதியளித்து, ரஷ்யா-உக்ரைன் போர் மண்டலத்திற்கு இந்தியர்களை அழைத்துச் சென்ற பெரிய மனித கடத்தல் வலையமைப்பை முறியடித்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு விசா ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் முகவர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனையின் போது பல நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 50 லட்சம் ரூபாய், குற்றப்பத்திரிகைகள், லேப்டாப்கள், செல்போன்கள், டெஸ்க்டாப்கள், சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிபிஐ தரப்பில் கூறியதாவது, இந்த கடத்தல்காரர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நெட்வொர்க்காக செயல்பட்டு யூடியூப் போன்ற சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும், ரஷ்யாவில் அதிக ஊதியம் பெறும் வேலைகளுக்காக உள்ளூர் தொடர்புகள் மற்றும் முகவர்கள் மூலமாகவும் இந்திய இளைஞர்களை கவர்ந்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது. அதன்பிறகு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு, போர் நடக்கும் பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், இந்தியர்களின் விருப்பத்திற்கு எதிராக ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் போரில் சில இந்தியர்கள் படுகாயமடைந்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிபிஐ கூறுகிறது.
மேலும், இது சம்பந்தமாக சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் அதிக ஊதியம் தரும் வேலை என்று கூறி இந்தியர்களை ரஷ்யாவிற்கு கடத்துவதில் ஈடுபட்டுள்ள தனியார் விசா ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் முகவர்களுக்கு எதிராக கடந்த 6ம் தேதி மனித கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த ஏஜெண்டுகளின் மனித கடத்தல் வலையமைப்பை நாடுமுழுவதும் பல மாநிலங்களில் பரவி உள்ளது என்றும் சந்தேகத்திற்குரிய ஆட்சேர்ப்பு முகமைகளின் இதுபோன்ற தவறான வாக்குறுதிகளுக்கு இரையாக வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு சிபிஐ அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதான முகமது அஃப்சானின் துயர மரணத்தைத் தொடர்ந்து, அவர் ரஷ்ய இராணுவத்தில் சேரும்படி தவறாக வழிநடத்தப்பட்டு உக்ரைனுடன் நடந்து வரும் மோதலில் கொல்லப்பட்டார். ஒரு வாரத்திற்கு முன்பு சூரத்தைச் சேர்ந்த ஹமில் மங்குகியா என்பவர் மோதலில் பலியான இரண்டாவது இந்தியர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: Court: மனைவியை வீட்டுவேலை செய்ய சொல்வது கொடுமை இல்லை…! டெல்லி உயர் நீதிமன்றம்…!