அகதிகள் முகாம் மீது தாக்குதல்..!! காசாவில் இன அழிப்பு..!! தடுக்க தவறிய ஐநா..!! இயக்குனர் திடீர் ராஜினாமா..!!
காசா அகதிகள் முகாம் மீதான இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, காசாவில் இனஅழிப்பு நடப்பதாகவும் அதனைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாகவும் கூறி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் இப்ராஹிம் பியாரி. இவரை குறிவைத்து தரையிலும், வான்வழியிலும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் - காசா போர் தொடங்கி 26 நாட்களான நிலையில், காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது நேற்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதில் ஹமாஸ் முக்கிய கமாண்டர் இப்ரஹிம் பியாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. மருத்துவமனையை தொடர்ந்து அகதிகள் முகாம் மீதும் இஸ்ரேல் குண்டு வீசுவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால்ம் காசாவில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் அமைப்பினர், பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதால், அப்பாவி உயிர்ப்பலிகள் தவிர்க்க இயலாது நேர்வதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே காசாவில் இன அழிப்பு நடப்பதாகவும், அதனைத் தடுக்க ஐநா தவறிவிட்டதாகவும், ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் கிரேக் மொகிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ”ஹமாஸ் அழிப்புப் போர்வையில் இஸ்ரேல் அப்பாவி பொதுமக்களை வீழ்த்துகிறது” என்று ஹமாஸ் தரப்பிலும் புகார்கள் எழுந்துள்ளன. மருத்துவமனையை தொடர்ந்து அகதிகள் முகாம் மீதும் குண்டு வீசப்படுவதை இதற்கு ஆதாரமாக ஹமாஸ் தெரிவிக்கிறது.