செய்தியாளர் மீது தாக்குதல்..!! திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஒட்டுமொத்தமாக தோல்வி..!! அண்ணாமலை கண்டனம்..!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளராக பணிபுரிந்து வருபவர் நேசபிரபு. இவர், நேற்றிரவு வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் நோட்டமிட்டு வந்துள்ளனர். இதனால், அவர் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது மறைந்திருந்த மர்ம கும்பல், அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நேசபிரபுவை, காமநாயக்கன்பாளையம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சம்பவ நடைபெறுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே நேசபிரபு போலீசில் புகார் அளித்தார். ஆனால், அவர்கள் மெத்தனப்போக்குடன் செயல்பட்டதால் இந்த தாக்குதல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”தமிழ்நாட்டில் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்டது. காவல்துறையின் கைகள் திமுக அரசால் கட்டப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகிறது. திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.