மீண்டும் அட்டூழியம்..!! தமிழக மீனவர்கள் 25 பேர் கைது..!! 4 நாட்டுப் படகுகளும் பறிமுதல்..!!
தமிழ்நாட்டை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இந்த ஆண்டு மட்டும் ஜனவரி தொடங்கி இன்றைய தேதி வரையில் இந்திய மீனவர்களின் 32 படகுகளையும், 238 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. சட்டவிரோதமாக எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர்தான் தமிழ்நாட்டை சேர்ந்த 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று மேலும் 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 4 நாட்டுப் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ள நிலையில், இலங்கை காங்கேசன்துறை முகாமில் வைத்து மீனவர்களிடம் கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டு மீனவர்கள் கைது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் முக.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். அதில், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இதுபோன்று அடிக்கடி கைது செய்யப்படுவது, தமிழ்நாட்டின் மீனவ சமுதாயத்தினரிடையே ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இந்த விஷயத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தலையிட்டு, தமிழக மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது இலங்கை வசமுள்ள மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் தேவையான நடவடிக்கையை விரைந்து எடுத்திட வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.
Read More : அண்ணாமலையின் ஆட்டம் ஓவர்..!! தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்..? வெளியான பரபரப்பு தகவல்..!!