ரூ.1916.41 கோடி மதிப்பிலான அத்திக்கடவு- அவினாசி திட்டம்... முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்...!
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை இன்று காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நீர்வளத்துறை சார்பில் ரூ.1916.41 கோடி மதிப்பில் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் 24,468 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை இன்று காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அண்ணாமலை கோரிக்கை
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்காக, குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீடு நிதி இதுவரையிலும் வழங்கவில்லை. அவர்களுக்கான இழப்பீடு, திட்டத்தின் தொடக்க விழா அன்றே அறிவிக்கப்பட வேண்டும். ஏற்கனவே இழப்பீடு வழங்கப்படாமல், பல ஆண்டுகள் காலதாமதமாகியிருக்கிறது. திட்டம் நிறைவேறுவது, அவர்களுக்கு ஒரு புறம் மகிழ்ச்சியளித்தாலும், அவர்களுக்கான இழப்பீடும் வழங்கப்படுவதே, அந்த மகிழ்ச்சியை முழுமையானதாக்கும். எனவே, குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீடும், உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.
மேலும் மத்திய அரசு, கடந்த 2021 ஆம் ஆண்டு கொண்டு வந்த தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம், ஒவ்வொரு மாநிலமும், அணைகள் பாதுகாப்புக் குழுவை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. தமிழகத்தில், பவானிசாகர், ஆழியாறு, திருமூர்த்தி அணை, அமராவதி அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள், போதிய பராமரிப்பின்றி இருக்கின்றன. அணைகளைப் பராமரிப்பதும், பாதுகாத்துக் கண்காணிப்பதும்தான் இந்தக் குழுவின் தலையாய பணி. ஆனால், தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் கடந்தும், திமுக அரசு, இதுவரை, தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்கவில்லை. இனியும் தாமதிக்காமல், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.