என்னங்க சொல்றீங்க.. ஒரு நாளுக்கு 25 மணி நேரமா..? ஷாக் ஆன விஞ்ஞானிகள்.. இன்னும் என்னென்ன ஆக போகுதோ..?
நமது பூமியில் இருந்து நிலவு விலகிச் செல்வதை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாகப் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் என்பதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். பூமியின் ஒரே நிரந்தரமான இயற்கைத் துணைக்கோளான நிலவு விலகிச் செல்வது என்பது பூமியில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது நமது பூமியின் ஒரே ஒரு இயற்கையான துணைக்கோளான நிலா இப்போது பூமியை விட்டு மெதுவாக நகர்ந்து செல்வது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த படிப்படியான பிரிப்பு நமது கிரகத்தின் நாட்களின் நீளத்தை பாதிக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, சந்திரன் என்று அழைக்கப்படும் நிலா பூமியிலிருந்து வருடத்திற்கு 3.8 சென்டிமீட்டர் வேகத்தில் நகர்கிறது. இதன் விளைவாக, தொலைதூர எதிர்காலத்தில், பூமியில் ஒரு நாள் 24 மணிநேரத்திலிருந்து 25 மணிநேரமாக அதிகரிக்கும்.
விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த நிகழ்வை ஆராய்ந்து, சந்திரனின் இயக்கத்தின் புவியியல் மற்றும் வரலாற்று தாக்கங்களை ஆராய்ந்தனர். 90 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறை புவியியல் உருவாக்கம் குறித்து அவர்கள் தங்கள் ஆய்வை நடத்தினர். பூமியிலிருந்து சந்திரனின் படிப்படியான இயக்கம் பூமியின் சுழற்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஒரு நாளின் நீளத்தை பாதிக்கிறது என்பதை இந்த ஆராய்ச்சி வெளிப்படுத்தியது.
இது தொடர்பாக விஸ்கான்சின்- மாடிசன் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறுகையில், "நிலவு நமது பூமியில் இருந்து விலகிச் செல்லும் போது, பூமி சுழலும் வேகமும் வெகுவாக குறையும். இப்படி நிலவு விலகிச் செல்ல செல்ல பூமியின் வேகம் குறைவதால் பகல் நேரம் என்பது அதிகரிக்கும். எங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது இதுதான்.. மேலும் அடுத்த கட்டமாகப் பல பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளை ஆய்வு செய்ய விரும்புகிறோம்" என்றார்.