For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அசர வைக்கும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு..!!

07:50 AM Mar 27, 2024 IST | Chella
அசர வைக்கும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு
Advertisement

ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார், பாஜக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விஜயகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கார்மேகம் முத்துவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement

இவர், தற்போது மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக உள்ள சரஸ்வதியின் மருமகன் ஆவார். தமிழ்நாட்டின் மிகப் பெரிய பணக்கார வேட்பாளர்களில் இவரும் முக்கியமானவராக உருவெடுத்துள்ளார். இவரது ரொக்க கையிருப்பே ரூ.10 லட்சமாகும். இவரது மனைவி கருணாம்பிகை அசோக்குமாரிடம் ரூ.5 லட்சம் கையிருப்பு உள்ளதாம். தன்னிடம் 10 கிலோ தங்கமும், வங்கிக் கணக்கில் சுமார் ரூ.7 கோடி இருப்பதாகவும் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

தனது மனைவி கருணாம்பிகையிடம் 10 கிலோ தங்கம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், மனைவியின் பெயரில் ரூ. 47 கோடி ரூபாய் சொத்து உள்ளதாகவும், இருவரது பெயரில் வீடு, நிலம், அலுவலகங்கள், காலி மனைகள் உள்ளிட்டவை இருப்பதாகவும் தனது வேட்புமனுவில் கூறியுள்ளார். கோவை, திண்டுக்கல், ஈரோடு, குமாரபாளையம், காங்கயம், சோழங்கபாளையம், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சொத்துக்கள் இருப்பதாகவும் ஆற்றல் அசோக்குமார் தெரிவித்துள்ளார். இத்தனை இருப்பதாக கூறியுள்ள அசோக் குமார், தனது பெயரிலோ அல்லது மனைவி பெயரிலோ எந்த வாகனமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

யார் இந்த ஆற்றல் அசோக்குமார்..?

ஆற்றல் என்பது அசோக்குமார் தொடங்கிய அறக்கட்டளையின் பெயராகும். இதனால்தான் அவருக்கு ஆற்றல் அசோக்குமார் என்ற பெயர் வந்தது. ஆற்றல் அசோக் குமார் 1970ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி பிறந்தார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகாவில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் பிறந்தவர். பேராசிரியர் ஆர்.ஆறுமுகம் மற்றும் சௌந்தரம்.கே.எஸ் அவர்களின் மகன். இவரது தந்தை அரசு கலைக் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்ற கணிதப் பேராசிரியர் மற்றும் தாய் கொங்குநாடு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து பின்னர் திருச்செங்கோடு தொகுதியின் (இன்றைய ஈரோடு தொகுதி) பாராளுமன்ற உறுப்பினராக 1991- இல் பதவி வகித்தவர்.

ஆற்றல் அசோக், கருணாம்பிகா குமாரை மணந்தார். இவர் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ டாக்டர் சி. சரஸ்வதியின் மகள் ஆவார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் (அஷ்வின் குமார் மற்றும் நிதின் குமார்). மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன், இன்டெல் கார்ப்பரேஷன், ஜெராக்ஸ் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களில் அசோக்குமார் பணியாற்றியுள்ளார். அசோக்குமார், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தார். பின்னர், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 1987-1991 வருடத்தில் மின் பொறியியல் (B.E) பயின்று பட்டம் பெற்றார்.

ஆற்றல் அசோக்குமார் அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில் பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை மின் மற்றும் கணினி பொறியியல் (M.S.) பட்டம் பெற்றார் . அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள இண்டியானாபோலிஸ் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (M.B.A.) பெற்றார்

2021ஆம் ஆண்டு ஆற்றல் அறக்கட்டளையைத் தொடங்கினார். கடந்த ஆண்டு முதல் ஆற்றல் அறக்கட்டளை ஈரோடு, நாமக்கல், திருச்சி, திருப்பூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் அத்தியாவசிய உள்கட்டமைப்பு மற்றும் பிற தகவல்களைச் சேகரித்து அவற்றின் உடனடித் தேவைகளை நிறைவேற்ற சமூகத்துடன் கைகோர்த்துச் செயல்பட்டு வருகிறது.

Read More : Salary Hike | சம்பள உயர்வு + நிலுவைத்தொகை..!! மார்ச் 30ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு வெளியாகும் குட் நியூஸ்..!!

Advertisement