ஹரியானாவில் பாஜக மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும்..!! - அமித்ஷா, ஹரியானா முதல்வர் நம்பிக்கை..!!
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் ( இசிஐ ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைக்கு மூன்று கட்டங்களாகவும், ஹரியானாவில் ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீர் வாக்காளர்கள் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 ஆகிய தேதிகளில் வாக்களிப்பார்கள், மேலும் மூன்றாம் கட்டம் ஹரியானாவுடன் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும். இரு மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
ஹரியானா தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து அமித் ஷா
இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பதிவில், "தேர்தல் ஆணையம் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அறிவித்ததை நான் வரவேற்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், ஹரியானாவில் மோடி ஜி தலைமையிலான பாஜக அரசு நல்லாட்சியின் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. இலவச வேலைகள், ஆன்லைன் டெண்டர் செயல்முறை, விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நலன்களுக்கு பல்வேறு திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தியது. இந்தச் சட்டமன்றத் தேர்தலில், ஹரியானா வாக்காளர்கள் அமோக பெரும்பான்மையுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக மாநிலத்தில் பாஜக ஆட்சியை அமைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று ஷா மேலும் கூறினார்.
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி
தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து ஹரியா முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”அரியானா மக்கள் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழாவிற்கு தயாராக உள்ளனர். அக்டோபர் 1 ஆம் தேதி, பொதுமக்கள் மீண்டும் வாக்குச் சாவடிக்குச் சென்று தாமரை பொத்தானை அழுத்தி மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை அமைப்பார்கள்" என்று பதிவிட்டார்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சடமன்றத் தொகுதிகளில் 73 பொது தொகுதிகளாகவும், 17 தனித் தொகுதிகளாகவும் உள்ளனர். இந்த நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி ஒரே கட்டமாக ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி நிறைவடைகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 2, 2024 நிலவரப்படி, 2.01 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மேலும், இங்கு 20 ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.