மணிப்பூரில் பதற்றம்: "சக வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய அசாம் ரைபிள் வீரர்.." காவல்துறை விசாரணை.!
மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அசாம் ரைபிள் படை பிரிவைச் சார்ந்த வீரர் தன்னுடன் பாதுகாப்பு பணியில் இருந்த சகவீரர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சக வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பின் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கலவரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மியான்மார் நாட்டிலிருந்து மணிப்பூர் மாநிலத்திற்குள் ஊடுருவும் நபர்களை தடுப்பதற்காக மணிப்பூர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள இந்திய மியன்மார் எல்லையில் அசாம் ரைபிள் படை பிரிவை சார்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த படை பிரிவை சார்ந்த வீரர் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து சகவீரர்களின் மீது தாக்குதல் நடத்த தொடங்கினார் இதனைத் தொடர்ந்து அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. துப்பாக்கியால் சுடப்பட்ட வீரர்கள் அனைவரும் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். தற்போது அவர்களுக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
காயம் அடைந்த வீரர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் மணிப்பூர் கலவரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தினை மணிப்பூர் கலவரத்துடன் தொடர்புபடுத்தி செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் காவல்துறை கேட்டுக் கொண்டிருக்கிறது.