இலவச பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் மொபைல் எண், சாதியை கேட்பதா..? எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..!!
கட்டணமில்லா பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் தேவையற்ற விவரங்களை சேகரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள காட்டமான அறிக்கையில், ”கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம், அவர்களுடைய பெயர், வயது, செல்போன் எண், சாதி போன்ற 15 விவரங்களைநடத்துநர்கள் விசாரித்து, போக்குவரத்துத் துறை வழங்கியுள்ள படிவங்களில் இவ்விவரங்களை பூர்த்தி செய்ய இந்த விடியா திமுக அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது கட்டணமில்லா பேருந்தில் பயணம் செல்லும் பெண்களை ஏன் இப்பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி உள்ளதாகவும், இதுசம்பந்தமாக நடத்துனருக்கும். பெண்களுக்கும் இடையே தகராறுகள் ஏற்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுவாக, பெண்களிடம் அவர்களது பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை கேட்பது, அவர்களுடைய தனி உரிமையில் தலையிடுவது போலாகும்.
அதுவும், மொபைல் எண்ணை நடத்துநர்கள் வாங்கும்போது, அப்பெண்களிடம் பேச முயற்சி செய்யக்கூடிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பெண்களின் மொபைல் போனுக்கு வேண்டாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவதற்கும் வாய்ப்புள்ளது. இவை அனைத்தையும் விட, பயணம் செய்யும் பெண்களிடம் நடத்துனர்கள், நீங்கள் என்ன சாதி என்று கேட்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
இந்த விபர சேகரிப்பு தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டால் ஏற்படும் பின்விளைவுகளை இந்த அரசு சிந்தித்ததா என்று தெரியவில்லை. இதுபோன்ற மக்களை தூண்டிவிடக்கூடிய சென்சிட்டிவ் நடவடிக்கைகளை இந்த விடியா திமுக அரசு செயல்படுத்துவதற்கு முன்பு, மூத்த அமைச்சர்களையோ அல்லது அனுபவம் வாய்ந்த அதிகாரிகளையோ முழுமையாக கலந்தாலோசித்ததா? இதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்று சிந்தித்ததா? என்பது தெரியவில்லை.
விடியா திமுக அரசின் போக்குவரத்துத் துறையின் இதுபோன்ற வெட்கக்கேடான நடவடிக்கைகளுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடனடியாக இதுபோன்ற புள்ளி விவரங்களை சேகரிக்கும் பணிக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.