ஆசிய ஹாக்கி!. தொடக்கம் முதலே அதிரடி!. அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!.
Asian Hockey: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் கடைசி லீக் போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
ஓமனில் U-21 ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில், 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் மூன்று லீக் போட்டியில் தாய்லாந்து (11-0), ஜப்பான் (3-2), சீனதைபே (16-0) அணிகளை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
கடைசி லீக் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு அராய்ஜீத் சிங் (3வது நிமிடம்), அர்ஷ்தீப் சிங் (9வது), குர்ஜோத் சிங் (11வது), ரோசன் குஜூர் (27வது), ரோகித் (30வது) தலா ஒரு கோல் அடித்தனர். தொடர்ந்து போராடிய தென் கொரிய அணிக்கு கிம் டேஹியோன் (18வது) ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்திய அணி 5-1 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியிலும் அசத்திய இந்திய அணிக்கு அராய்ஜீத் சிங் (37 வது நிமிடம்), அர்ஷ்தீப் சிங் (44, 60வது) மீண்டும் கோல் அடித்து கைகொடுத்தனர். கடைசி வரை போராடிய தென் கொரிய அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8-1 என்ற கணக்கில் தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்தது.
லீக் சுற்றின் முடிவில் 'ஏ' பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த இந்தியா (12 புள்ளி), ஜப்பான் (9), 'பி' பிரிவில் முதலிரண்டு இடத்தை கைப்பற்றிய பாகிஸ்தான் (12), மலேசியா (7) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நாளை நடக்கவுள்ள அரையிறுதியில் இந்தியா-மலேசியா, பாகிஸ்தான்-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
Readmore: 34 வயதில் ICC-ன் புதிய தலைவரானார் அமித்ஷா மகன்.. இளம் தலைவர் என்ற சாதனை..!!