ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி!. கோப்பையை தட்டித்தூக்கிய இந்திய மகளிர் படை!. சீனாவை வீழ்த்தி அபாரம்!
Hockey: மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் 1-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
பீஹாரில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 7வது சீசன் நடந்தது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன. நேற்று நடந்த பைனலில் உலகத் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள, நடப்பு சாம்பியன் இந்திய அணி, 6வது இடத்திலுள்ள சீனாவை எதிர்கொண்டது. பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீன அணி, இந்தியாவுக்கு கடும் சவால் கொடுத்தது.
மறுபக்கம் லீக் சுற்றில் 3-0 என சீனாவை வென்றதால், இந்திய வீராங்கனைகள் நம்பிக்கையுடன் போராடினர். இந்திய அணிக்கு கிடைத்த நான்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளும் வீணாகின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி துவங்கிய முதல் நிமிடத்தில் (31 வது) இந்தியாவுக்கு ஐந்தாவது 'பெனால்டி கார்னர்' கிடைத்தது. இம்முறை தீபிகா, 'ரிவர்ஸ் ஹிட்' அடித்து, பந்தை கோலாக மாற்றினார். இத்தொடரில் இவர் அடித்த 11வது கோல், தவிர அதிக கோல் அடித்த வீராங்கனை ஆனார்.
42வது நிமிடம் இந்தியாவுக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' கிடைத்தது. எளிதாக கோல் அடிக்க வேண்டிய இந்த வாய்ப்பை, வீணடித்தார் தீபிகா. முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக (2023, 2024) சாம்பியன் ஆனது. அரையிறுதியில் தோற்ற ஜப்பான், மலேசிய அணிகள், நேற்று மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதின. இதில் ஜப்பான் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஜப்பான் சார்பில் ஹோரிகவா (3வது நிமிடம்), முரயமா (24), டமுரா (28), ஹேஸ்கவா (35) கோல் அடித்தனர். மலேசியா தரப்பில் அஜ்ஹெய்ரி (48) ஆறுதல் தந்தார்.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி மூன்றாவது முறையாக கோப்பை வென்றது. கடந்த 2016, 2023ல் சாதித்த இந்தியா, நேற்று (2024) மீண்டும் அசத்தியது. தவிர, 2013, 2018ல் இரண்டாவது இடம் பிடித்தது. * இத்தொடரில் அதிக கோப்பை வென்ற தென் கொரியாவை (3) இந்தியா சமன் செய்தது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் பரிசு, பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 1.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: அடுத்த ஷாக்!. இந்த பிரபலும் விவாகரத்து?. கோலி போட்ட ட்வீட்!. குழப்பத்தில் ரசிகர்கள்!