உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் நிறைவு.. சிறப்பு அலுவலர்கள் நியமனம்..!! - தமிழ்நாடு அரசு அதிரடி
தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அந்தப் பொறுப்புகளை கவனிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதுதொடர்பான பணிகள் முழுமை பெறாத காரணத்தால் 28 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதன்பிறகு 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி வார்டுகள் வரையறை செய்யப்பட்டு தனியாக தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து 2022ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. அண்மையில், பல்வேறு கிராமப் பஞ்சாயத்துகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மாநகராட்சிகளுடன் இணைக்கவும் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளைத் தவிர்த்து தமிழகத்தில் எஞ்சியுள்ள கிராமப் பஞ்சாயத்துக்களின் பொறுப்புகளை கவனிக்க சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மாவட்டங்களில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் 05.01.2025 உடன் முடிவடைந்துள்ளது. இந்த மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கும் வரை, மூன்றடுக்கு ஊராட்சிகளின் நிர்வாகம் செம்மையாக நடைபெறுவதை உறுதிசெய்திட 06.01.2025 முதல் 05.07.2025 வரை தனி அலுவலர்களை நியமனம் செய்து அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முறையான நிர்வாகத்தினை தொடர்ந்து செயல்படுத்திடும் வகையில் அலுவலர்கள் நிர்வாக நடைமுறையினை கண்காணித்திட அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), ஒவ்வொரு ஊராட்சியிலுள்ள தீர்மானப்புத்தகம், பிற பதிவேடுகள், ரொக்கப்புத்தகங்கள் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத காசோலை புத்தகங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் (Bank Pass Book) ஆகியற்றை பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும். பொறுப்பில் எடுத்துக்கொண்டதற்கான அறிக்கையினை 08.01.2025 காலை 10.00 மணிக்குள் ஊராட்சிகளின் இணைக்கப்பட்டுள்ளது). ஆய்வாளருக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
05.01.2025- தேதியில் காசாக்கப்படாமல் நிலுவைய 26 காசோலைகளைக் (Uncashed Cheques) கணக்கிட்டு அக்காசோலைகளை வங்கியில் அனுமதிக்கும்போது வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்க வேண்டும் என்ற விவரத்தினை வங்கி மேலாளர்களுக்கு முன்னோடி வங்கி மேலாளர் (LDM) மூலம் உடனடியாக சுற்றறிக்கை அனுப்பிட வேண்டும். சம்மந்தப்பட்ட அலுவலர்கள் 06.01.2025 அன்று முற்பகல் நிர்வாக நடைமுறைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதற்கான விவரத்தினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற முறையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஊராட்சி நிர்வாகத்தைத் திறம்பட செயல்படுத்திட உரிய அறிவுரைகள் வழங்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்..!! – 9 பேர் பலி