வலுபெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 3 நாள்கள் மழைக்கு வாய்ப்பு..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்றுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான செய்தி அறிக்கையில், நேற்று மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதி, இன்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியாக நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்ததாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து, 9-ஆம் தேதி அன்று, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இந்த காற்றழுத்ததாழ்வு மண்டலமானது, அடுத்த 3 தினங்களில் மேற்கு- வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம்-வடக்கு ஓடிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக இன்று, நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வறும் 9 ஆம் தேதிமுதல் 13 ஆம் தேதிவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
Read more ; Infosys நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! சம்பளம் எவ்வளவு..?