For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"பாஜக, என்னிடமும் பேரம் பேசியது.. ஆனால் நான் மடங்க போவதில்லை." - அரவிந்த் கெஜ்ரிவால்.!

04:09 PM Feb 04, 2024 IST | 1newsnationuser4
 பாஜக  என்னிடமும் பேரம் பேசியது   ஆனால் நான் மடங்க போவதில்லை     அரவிந்த் கெஜ்ரிவால்
Advertisement

ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை, பாஜக பேரம் பேசியதாக, சில நாட்களுக்கு முன்பு டெல்லியின் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். அந்த குற்றச்சாட்டின் விசாரணை நடைபெறும் வேளையில், தன்னையும் பாஜகவில் இணைய கோரி அவர்கள் வற்புறுத்துவதாக பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தான் வளைந்து கொடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க, பேரம் பேசிய குற்றச்சாட்டிற்கு விசாரணை நடந்து வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடந்த ஒரு பள்ளியின் அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய டெல்லியின் முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பகீர் தகவலை தெரிவித்தார்.

அந்த விழாவில் பேசிய அவர், "எங்களுக்கு எதிராக பாஜக எந்த சதியையும் செய்ய முடியும். நான் உறுதியாக இருக்கிறேன். நான் வளைந்து கொடுக்க போவதில்லை. என்னையும் பாஜகவில் இணையச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ஆனால் நான் ஒருபோதும் பாஜகவிற்கு செல்ல மாட்டேன்", என்று கூறினார்.

ஆம் ஆத்மி கட்சி ஒவ்வொரு ஆண்டும் தனது பட்ஜெட்டில் 40 சதவிகிதத்தை டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் செலவு செய்வதாகக் கூறினார். பாஜக அரசு வெறும் 4 சதவிகிதத்தை மட்டும் தான் இதற்கென ஒதுக்கியுள்ளது என்றும் குற்றம் சாட்டினார். மேலும் சிறையில் அடைக்கப்பட்ட தனது கட்சியை சேர்ந்தவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திர ஜெயின் பற்றியும் பேசினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், "மணீஷ் சிசோடியா செய்த தவறு, நல்ல பள்ளிகளை உருவாக்கியது தான். சத்யேந்திர ஜெயின், நல்ல மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை உருவாக்க பாடுபடவில்லை என்றால், அவர் கைது செய்யப்பட்டிருக்க மாட்டார். பாஜக அனைத்து சதிகளையும் செய்தாலும், எங்களை அவர்களால் தடுக்க முடியவில்லை. இப்போது போல எப்போதும் என் மேல் அன்பை பொழிந்து கொண்டே இருங்கள். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை" என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை பாஜக பேரம் பேசிய விவகாரத்தில், ஆம் அத்மி கட்சியின் அமைச்சர் ஆதிஷியின் வீட்டிற்கு டெல்லி போலீசார் சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லாததால், அந்த நோட்டீஸ் டெல்லி கல்வி அமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் இந்த நோட்டீஸிற்கு பதிலளிக்குமாறு ஆதிஷிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் சேர அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பேரம் பேசிய விவகாரத்தில் பாஜகவால் அணுகப்பட்ட எம்எல்ஏக்களின் பெயர்களை குறிப்பிடுமாறும் அரவிந்த் கெஜ்ரிவாலை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags :
Advertisement