Memorial: மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடம்!… முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்!… சிறப்பம்சங்கள்!
Memorial: சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையில், 39 கோடி ரூபாயில், நினைவிட கட்டுமான பணிகளை, 2022 ஜனவரியில் பொதுப்பணித்துறை துவக்கியது. தற்போது, கட்டுமான பணிகள் முடிந்துஉள்ளன. இதன் ஒரு பகுதியாக, கருணாநிதி நினைவிட முகப்பில், அண்ணாதுரை நினைவிடமும், அருங்காட்சியகமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இவற்றை, முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், கருப்பு நிற மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. சமாதியின் மேல் உள்ள மூன்று வளைவுகளில், வியட்நாம் வெள்ளை கற்கள்; தரை முழுதும் ஜெய்ப்பூர் மார்பிள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
நினைவிடத்தின் இரண்டு பகுதிகளிலும், நான்கு சுரங்க பாதைகள் உள்ளன. அதற்குள் சென்றால், 20,000 சதுர அடி பரப்பளவில், பூமிக்கடியில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. நீர் உள்ளே செல்லாமல் இருக்க, தேவையான கட்டமைப்பும் உள்ளது. அங்கு, மூன்று திரைகளை இணைத்து தியேட்டர் அமைக்கப்பட்டு உள்ளது. ஒன்றில், கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு வீடியோ, 21 நிமிடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும். இரண்டாவது தியேட்டரில், கருணாநிதி ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட சாதனை திட்டங்கள் குறித்து விளக்கப்படும். மூன்றாவது தியேட்டர், திருவாரூர் - சென்னை இடையிலான மன்னை ரயில் போல வடிவமைக்கப்பட்டு உள்ள்ளது.
இந்த ரயிலில், 7டி தொழில்நுட்பத்தில், கருணாநிதி கடந்து வந்த பாதை, அவரது திட்டங்கள் குறித்து விளக்கப்படுகின்றன. ரயிலில் பயணிப்பது போன்ற அனுபவத்தை, இந்த தியேட்டர் அளிக்கிறது. ரயில், அருவி ஓரத்தில் பயணிக்கும் போது, நம் மீது சாரல் அடிக்கிறது. பூக்களின் நடுவே பயணிக்கும் போது, அதன் வாசம் வீசுவது போன்ற தொழில்நுட்பங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
'டிவி'யில் தெரியும், கருணாநிதி உருவத்தின் முன் அமர்ந்து கேள்வி கேட்டால், பதில் சொல்லும் வசதியும் நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.கருணாநிதி எழுதிய புத்தகங்களை பதிப்பித்த பல்வேறு பதிப்பகத்தாரின் விற்பனை மையமும் உள்ளது. நினைவிடத்தின் பின்பகுதியில், மெரினா கடலை ரசிக்கும் வகையில், பிரமாண்டமான பார்வையாளர் மாடம், இருக்கைகள், பூச்செடிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. கருணாநிதி சமாதியில், சூரியன் ஒளிர்வது போன்ற லேசர் வசதியும் உள்ளது.
Readmore:சூதாட்ட மோகத்தில் தாய் கொலை.! பணத்திற்காக மகன் செய்த கொடூரம்.!