ஆம்ஸ்ட்ராங் மறைவு..!! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு..!!
ஆம்ஸ்ட்ராங் மறைவைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஜூலை 5ஆம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் அன்று இரவே கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, மேலும் 3 பேர் அடுத்த நாள் கைதாகினர். இந்த கொலை சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்க்கொடி, வழக்கறிஞரும் தமாகா நிர்வாகியாக இருந்தவருமான ஹரிஹரன், திருநின்றவூரைச் சேர்ந்த அருளின் கூட்டாளியும் திமுக பிரமுகரின் மகனுமான சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த பெண் தாதா அஞ்சலையும் கைது செய்யப்பட்டார். அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரிதரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக வழக்கறிஞர் பி. ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநில ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.